பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு அனுமதி பெறுவதற்காக சாதாரணதர பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்தியடைய வேண்டியது கட்டாயமில்லையென்று கல்வியமைச்சின் செயலாளர் நிமால் பண்டார தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பாடவிதானங்களுக்கு ஏற்ப உயர்தர பரீட்சைக்காக ஆறு பாடங்களை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டிய அதேவேளை மேலும் மூன்று பாடங்களில் தோற்ற வேண்டும்.
இதற்கமைய புதிய பாடத்திட்டத்தின் படி கடந்த வருடம் சாதாரணதரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களுக்கு கட்டாயமாக ஆறு பாடங்களுக்கும் மூன்று மேலதிக பாடங்களுக்கும் தோற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கட்டாய பாடங்களில் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற வேண்டும். அதேவேளை இப்பாடங்களில் மூன்று பாடங்களில் சிறப்புச் சித்தி பெற்றிருப்பது க.பொ.த. உயர்தரத்துக்கான பரீட்சைக்கான தகைமையாகக் கருதப்படும்.
இந்நிலையில், மேலதிக பாடங்களில் பெற்றுக் கொள்ளப்படும் சிறப்புச் சித்தி உயர்தர பரீட்சைக்கான தகுதியாகக் கருதப்படமாட்டாதென்று கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.