பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சம் அளிக்காதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசீனா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 262 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசீனா மேலும் கூறியதாவது; “அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் பங்களாதேஷ?க்குள் தீவிரவாதிகள் புகுவதை அனுமதிக்கமாட்டோம். அண்டை நாடுகளுடனான உறவு குறிப்பாக, இந்தியாவுடனான உறவை தொடர்வதே புதிய அரசின் செயல்திட்டமாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதில்லை. இனி ஆட்சி அமைக்கும்போதும் இந்த நிலை தொடரும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய அதிரடிப் படையை அமைக்கலாம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் இந்த பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. பயங்கரவாத விடயத்தில் இந்த பிராந்திய நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி பேசுவது வழக்கமாக இருக்கிறது. தெற்காசிய அதிரடிப்படை உருவாக்கப்பட்டால் இந்த நிலை இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடந்துமுடிந்த தேர்தல் மோசடி நிறைந்த தேர்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஷியா. 300 ஆசனங்களைக் கொண்டது பங்களாதேஷ் பாராளுமன்றம். இதற்கான தேர்தல் டிசம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி கூட்டணி வெறும் 32 இடங்களையே வென்றது. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது