“மட்டக்களப்பில் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். தற்போது பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களால் தெரிவு செய்யப்படும் இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எடுக்கவேண்டும். இவ்வருட நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் அகதிகள் என எவருமே இல்லை என்ற நிலையினை உருவாக்குவதே எனது நோக்கம்’. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், புதிய ஆண்டிற்கான மீள்குடியேற்றம் தொடர்பான முதலாவது கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சரின் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான இணைப்பதிகாரி அ.செல்வேந்திரன் தலைமை வகித்தார்.
“”பாதுகாப்பு வலயத்திற்குள் வரும் கிராமங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களுக்கு விருப்பமான மாற்று இடங்களை அவர்களே தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக அவ்வதிகாரிகள் அம்மக்களை சந்தித்து ஆவன செய்யவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் வாழ்ந்தபோது அம்மக்கள் நிறைந்த வளங்களோடு வாழ்ந்தவர்கள் ஆவர். ஆகவே, அம்மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் ஜீவனோபாயத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முறையில் அவர்கள் விரும்புகின்ற இடங்களில் அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அவர்கள் முன்னர் வாழ்ந்து வந்த இடங்களுக்கு உரிய பெறுமதியான நட்டஈட்டை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறினார். கிழக்கு மாகாண அரசு உருவாகியதன் பிற்பாடு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அதனை மனதில் இருத்தி அம்மக்களின் தேவைகளை அறிந்து கிழக்கு மாகாண அரசில் பணியாற்றும் அத்தனை அதிகாரிகளும் செயலாற்ற வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அகதிகள் என்று யாரும் இருக்கமுடியாத நிலையை குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் செய்துமுடிக்க வேண்டிய பொறுப்பு மாகாண நிர்வாகத்துக்கு உண்டு என்றும் முதலமைச்சர் கூறினார்.