முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று ஐந்து தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 24 ரக மற்றும் ஜெட் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஓட்டுசுட்டானுக்கு வட – கிழக்காக 6 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளங்களை இலக்கு வைத்து நேற்றுக் காலை 6.30 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவுக்கு வடக்கே 2 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு இலக்குகள் மீது நேற்றுப் பிற்பகல் 1.20 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆணையிறவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் முதலாவது செயலணியினருக்கு உதவியாக இந்த விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகருக்கு வடகிழக்கே 4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புலிகளின் ஒன்று கூடும் தளம் மீது நேற்று பிற்பகல் 2. 45 மணியளவில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை, ஆணையிறவு மற்றும் பரந்தனுக்கு கிழக்கு பகுதியிலுள்ள புலிகளின் இரு இலக்குகள் மீது நேற்று மாலை 5.00 மணி 6.30 மணியளவில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். விமானப்படையினரின் இந்த தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமான ஒட்டிகளும், களமுனை படைவீரர்களும் உறுதி செய்துள்ளதாக விமானப் படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.