புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சயனைட் அருந்தி தற்கொலை செய்யும் காலம் நெருங்கிவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (04) மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், புலிகளது நிருவாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம். ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகின்ற அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கி கொலை செய்த பிரபாகரன் தானும் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குண்டு இருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்படும்.
கிழக்கைப் போன்று வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஒரு ஜனநாய சமூகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமானதொரு அரசியல் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இதற்காகவே தான் ஜனாதிபதியும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
இவ்வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்னேற்றங்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு பாரிய வெற்றியைக் காட்டுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.