முல்லைத்தீவைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் ஐம்பதாயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றியுள்ள படையினர் தங்கள் முன் நகர்வு முயற்சியைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேநேரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களைப் படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம் இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களைப் பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது.57 ஆவது, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றைச் சேர்ந்த 100 பற்றாலியன்களைக் கொண்ட 50,000 படையினருடன் இறுதிக் கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படையணிகள் முல்லைத்தீவை நோக்கிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அடர்ந்த காடுகளுக்குள் விஷேட படையணிகளைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மரபு வழிப் போரிடும் ஆற்றலை படையினர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் முறியடித்து விடுவார்களெனவும் தெரிவிக்கப்படுகிறது.