வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர விமானத்தாக்குதலை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வன்னித் தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
காஸா மக்கள் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலுக்கு எதிராக நீங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்திருக்கும் இவ்வேளையில் உங்கள் கவனத்தை வன்னியில் நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கொடூர வான் தாக்குதல் மீது கொண்டுவரவேண்டும். இரவு பகல் பாராது தினமும் பொதுமக்கள் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. விமானப்படையின் புள்ளி விபரப்படி 2007 ஆம் ஆண்டில் 900 தாக்குதல்களும்,2008 ஆம் ஆண்டில் இதேபோன்று 800 தாக்குதல்கள் வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்கள் பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தாக்குதல்களால் பொது மக்கள் பலமுறை இடம்பெயரும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடரும் மற்றும் ஒரே இலக்கிலான தாக்குதல் மூலம் வன்னி நிலப்பரப்பில் இருக்கும் மக்களை இலங்கை அரசாங்கம் தனது இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வர நிர்ப்பந்திப்பதற்கான தாக்குதலாகவே செய்கின்றது. இந்த நிலையானது எந்தவிதமான மனிதாபிமான சட்டங்களுக்குள்ளும் யாப்புகளுக்குள்ளும் அடங்காததும் மக்களை அவர்களது வாழ்விடங்களிலும் இருந்து பலவந்தமாக வெளியேற நிர்ப்பந்திப்பது முழுமையாக மனித உரிமை சட்டங்களை மீறும் செயற்பாடாகின்றது.
அரசாங்கம் வன்னி மீது ரஷ்யத் தயாரிப்பான கொத்தணிக் குண்டுகளை வீசுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே இலங்கை அரசு கொத்தணிக்குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மறுத்துள்ளது. 20081231, 20090101,20090102 நாட்களில் இடம்பெற்ற இழப்புகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 31 ஆம் திகதி நாலு பொதுமக்கள் கொல்லப்பட்டு 19பேர் படுகாயமடைந்தனர். 1 ஆம் திகதி ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டு 26 பேர் படுகாயமடைந்தனர். 2 ஆம் திகதி ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டு 20 பேர் படுகாயமடைந்தனர். இத்தகைய மனிதப்படுகொலையைக் கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை தங்களால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.