பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நடைபெற்ற கடும் மோதலில் 60க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், நூறு படையினர் வரை காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து “புதினம்’ இணையத்தளம் கூறுகையில்;
பரந்தனிலிருந்து இரண்டாம் கட்டை நோக்கி படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதையடுத்து விடுதலைப் புலிகள் கடும் பதில் தாக்குதலைத் தொடுக்கவே இரு தரப்புக்கும் இடையே சமர் நடைபெற்றது. கடும் ஷெல் வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர். எனினும், பிற்பகல் வரை புலிகளும் மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் தங்கள் பழைய நிலைகளுக்குத் திரும்பினர். இந்த முறியடிப்புச் சமரில் 60 படையினர் கொல்லப்பட்டதுடன், நூறுக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இதன் போது படையினரின் சடலங்களும் இராணுவப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பி.கே.எல். எம்.ஜி.1, ஏ.கே.எல்.எம்.ஜி.1, ஆர்.பி.ஜி1, ரி. 56 ரகத் துப்பாக்கிகள்4 உட்பட பல ஆயுதங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்