சென்னையில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் வர்த்தக மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாலும் இலங்கையில் கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதைத் தடுக்கவும் தமிழக கடல் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் கண்காணிப்பு பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழில் அதிபர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் தாக்குதல் நடத்தப்போவதாக சவூதி அரேபியாவில் இருந்து ஈமெயில் மூலம் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கள் அடுத்த தாக்குதல் இந்த மாநாடு தான் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் தாக்குதல் நடத்திய “டெக்கான் முஜாகிதீன்’ தீவிரவாத இயக்கம் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளது. மிரட்டல் கடிதம் வந்தது பற்றி சென்னை சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் தொழில் மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்புப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்படுகிறார்கள். மாநாட்டில் கலந்துகொள்ள வரும் பிரதமரும் ஜனாதிபதியும் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளனர்.
எனவே, ஆளுநர் மாளிகைக்கும் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்புப்போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்போது இருந்தே சென்னை புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதால் தமிழக கடலோரப் பகுதியும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்கத் தமிழக கடலோரப் பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.