பயங்கர வாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு வசந்தம் அபிவிருத்திச் செயற்திட்டத்திற்காக இவ்வருடத்திற்கென 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக மீள் குடியேற்ற அமைச்சு 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. வடக்கில் துரித அபிவிருத்தியை மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் செயலகம் தெரிவித்தது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கென வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இரண்டு அகதி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம் முகாம்களில் தற்போது 750 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான பாதுகாப்பு உணவு, மருந்து பொருட்கள், உட்பட அடிப்படைத் தேவைகளை வவுனியா மாவட்டச்செயலகத்தினரும் பிரதேச பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.