பங்களாதேஷின் பிரதமராக ஷேய்க் ஹசீனா இன்று செவ்வாக்கிழமை பதவியேற்கவுள்ளார். தலைநகர் டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். ஜனாதிபதி அய்ஜுத்தீன் அகமது பிரதமருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்ற பின்னர் புதிய பிரதமராக ஹசீனாவைத் தேர்ந்தெடுத்தனர். பங்களாதேஷில் கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 259 இடங்களில் வென்று மூன்றில் இருமடங்கு பெரும்பான்மையைப் பெற்றது.
இந்தக் கூட்டணியில், முன்னாள் ஜனாதிபதி எச்.எம்.எர்ஷத் தலைமையிலான ஜாதியா கட்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலிதா ஷியா தலைமையிலான கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் குளறுபடி, மோசடி என்று தொடக்கத்தில் புகார் கூறி வந்தாலும் பின்னர் தமது கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொண்டு புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் காலிதா ஷியா . இருப்பினும் அவரது கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்கவில்லை.