சர்வ கட்சி மாநாட்டில் இன்றைய போக்கு நம்பிக்கையூட்டுவதாகத் தெரியவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இம்மாத இறுதிக்குள் அரசியல் தீர்வு யோசனையை முன்வைக்கத் தவறினால் சர்வகட்சி மாநாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படலாமெனவும் சர்வகட்சி மாநாட்டுக்கு சாம்பிராணி பிடிப்பதில் அர்த்தமில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சிக் கூட்டணியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாவது; யுத்த வெற்றியின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுதேட முடியாது. அதற்குச் சமாந்தரமான நிலையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அதில் ஆர்வம் காட்டுவதாகவே தெரியவில்லை.
சர்வகட்சிக் குழுவின் மீதான நம்பிக்கை தமிழ் பேசும் மக்களுக்கு அற்றுப் போய்விட்டது. இம்மாத இறுதிக்குள் சர்வகட்சி குழு அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதில் பங்கேற்பது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும். ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றரை வருடங்களுக்கு முன்பே சர்வகட்சி மாநாட்டிலிருந்து வெளியேறி விட்டது. ஜே.வி.பி.யோ சர்வகட்சி குழுவை கலைக்கக் கோருகிறது. அரசியல் தீர்வு குறித்து அரசு அலட்சியப் போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த அடிப்படையில் இந்த அரசு மீது நாம் நம்பிக்கை வைக்க முடியும் எனக் கேட்க விரும்புகிறேன்.
கடந்த இரண்டு தினங்களாக முஸ்லிம்கள் வாழும் கிராமப்புறங்களில் மக்களையும் வர்த்தக நிலையங்களையும் பட்டாசு கொளுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். தேசப்பற்றை திணிக்க முடியாது. தேசப்பற்று தானாக வரவேண்டும். தமிழ் மக்களின் மனோநிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் கிழக்கில் வாழும் தமிழ்முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தலாம். தமிழ், முஸ்லிம் மக்கள் பலவந்தப்படுத்தப்படுவதை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். முஸ்லிம் மக்களிடம் தேசிய உணர்வு உண்டு. அரசு தனது சுயநலனுக்கு மக்கள் மீது எதனையும் திணிக்க முடியாது. இந்த யுத்தமும் யுத்த வெற்றியும் மக்களை துருவப்படுத்தும் போக்காக மாறியுள்ளது. தீவிரவாத சக்திகளின் கைப்பொம்மையாக ஜனாதிபதியும் அவரது அரசும் மாறியுள்ளது. தவறான திசையில் சென்று கொண்டிருக்கும் அரசுக்கெதிராக மக்கள் பேரணியை திரட்ட எதிர்க் கட்சிகள் கூட்டணி தயாராகியுள்ளது. முதலாவது பேரணி புதன்கிழமை கொழும்பில் இடம்பெறும். இன, மத, மொழி பேதம் மறந்து எமது உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.