கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் பெற்றோல் விளையும் பூமியல்ல. அப்படி விளைந்தால், ஐக்கிய தேசிய கட்சி கூறுவதைப்போன்று பெற்றோல் விலையைக் குறைக்க முடியுமென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிவிட்டதால், இனி பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டுமென்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாரென்றும் இது மிகவும் வேடிக்கையான ஒரு கூற்றாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டார். “கிளிநொச்சியை நோக்கிய படை நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏளனப்படுத்தினார்கள். கிளிநொச்சிக்குச் செல்வதாகக் கூறி, மதவாச்சிக்குச் செல்கிறார்கள் என்றும், அலிமங்கடவுக்குச் (ஆணையிறவு) செல்வதாகக் கூறி, பாமன்கடைக்குச் செல்கிறார்கள் என்றும் ஐ.தே.க வினர் கூறினார்கள். ஆனால், இந்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் படையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார். விரைவில் முல்லைத்தீவும் கைப்பற்றப்படுமென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.