நாட்டின் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் ஒரே தருணத்தில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. அவரது பதவிக்காலத்தை 20 வருடங்களாக அதிகரிக்கச் செய்வதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:- வன்னியில் சுமார் 3000 அரச சார்பற்ற நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 80 பில்லியன் ரூபா இப்பகுதியின் அபிவிருத்திக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் புலிகளுக்குரிய பங்கர்கள், முகாம்கள், பதுங்கு குழிகளையே அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். பிரபாகரன் தான் ஒருவரே தலைவர் என்றும் அவரை தோற்கடிக்க முடியாது என்றும் மார்தட்டிக் கொண்டிருந்தார். பல தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். படையினரை இழந்திருக்கிறோம். இதற்கு காரணம் எமக்குடையே ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாமையை பயன்படுத்திக் கொண்டார்கள்.
புலிகள் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலாவது பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும். இது தொடர்பாக சிந்தித்து செயற்படவும் வேண்டும. படையினர் வடக்கில் கைப்பற்றும் சகல பிரதேசங்களிலும் பெளத்த விகாரைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்டகுளங்கள் இருக்கின்றன. 1500 குளங்கள் இருக்குமானால் 1500 கிராமங்கள் இருக்க வேண்டும். அப்படியானால் 1500 விகாரைகள் இருந்திருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் இருக்கின்றன.