விடு தலைப் புலிகளின் தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.இருப்பினும், புலிகள் மீண்டும் கிளிநொச்சியை மீட்பர் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகின்றது என ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவித்தன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு போன்ற முகாம்களில் அகதிகளாகவுள்ள மக்களே இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.
அங்கு அகதியாக வாழும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; இந்தப் போரினால் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் பொதுமக்களே. அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த பின்னர் கூட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டமான நிலையே. புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையேயான இந்த சிவில் யுத்தமானது ஆசியாவிலே மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகும். இது 1983 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பே. அவர்களின் முக்கிய பாதுகாப்பு அரணாகவும், பொருளாதார மத்திய நிலையமாகவும் கிளிநொச்சி காணப்பட்டது. ஆனால், தற்போது குண்டுகள் துளைத்த கட்டிடங்களுடனும் இடிபாடுகளுடனும் பாலைவனமாய் காணப்படுகின்றது. சிறுபான்மை தமிழருக்காக புலிகளால் கேட்கப்பட்ட தனிநாட்டின் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இராணுவத்தினருக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.