விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்.ரி.ரி.ஈ.) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றிரவு (07) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) இது தொடர்பில் சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து உடனடியாக அவ்வியக்கம் தடை செய்யப்பட்டதாக அரசாங்கம் நேற்றிரவு அறிவித்தது.
இத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுப் புலிகள் இயக்கம் பேச்சுக்கு வரமுடியுமென அறிவித்துள்ள அரசாங்கம் மீதான இத்தடை அரசியல் ரீதியான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு எவ்விதத்திலும் தடையாக அமையாதெனவும் தெரிவித்தது. அமைச்சரவையின் மேற்படி தீர்மானத்தை ஊடகவியலாளர்களுக்கு அறிவிககும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றிரவு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இம்மாநாட்டில் அமைச்சர்கள் மைத்திரி பாலசிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஏ. எல். எம். அதாவுல்லா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்கள், விடுதலைப் புலிகளை இலங்கையில் ஒழித்து விடலாம். எனினும் சர்வதேச ரீதியில் அவ்வமைப்பின் சகல செயற்பாடுகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இத்தடை உறுதுணையாக அமையுமென தெரிவித்தனர்.
உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கெதிராக மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுடன் 24 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்நாடுகளோடு இணைத்து செயற்படவும் இந்தடை பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் 2009/1 ஆம் இலக்க சரத்துக் கிணங்கவே புலிகள் மீதான இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான பிரதான காரணம் குறித்து அமைச்சரவையின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான மைத்திரிபால சிறிசேன கூறுகையில்; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் அப்பாவிப் பொதுமக்களை வரையறுக்கப்பட்டதொரு பிரதேசத்திற்குள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி பலவந்தமாக பிடித்து வைத்துக் கொண்டு அம் மக்களின் உயிர்களையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாமென்றும் பொதுமக்களுக்கு வழங்கும் அவசர நிவாரணங்களுக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் தடங்கல்களை விளைவிக்க வேண்டாமென்றும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.
விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக நிர்வகிக்கப்படும் பிரதேசத்தினுள் சிறை பிடித்தோ அல்லது ஏதாவது இடத்திற்குள் மட்டுப்படுத்தியோ வைத்திருக்கும் பொது மக்களை, அப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல இடமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தினால் புலிகளிடம் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை அலட்சியம் செய்துள்ளனர்.
அத்துடன், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களை சட்ட விரோதமாக சட்ட விரோதமான முறையில் அந்த அமைப்பின் போராளிகளாக பலவந்தமாக இணைத்துக் கொண்டதன் மூலம் அம் மக்களின் உயிர்களுக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றின் அடிப்படையிலேயே இந்த தடை குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று (நேற்று) முதல் புலிகள் தடை செய்யப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படுகிறது’ என்றும் அமைச்சர் சிறிசேன சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், இங்கு விளக்கமளித்த ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்; “இந்த ஒழுங்கு விதியானது 2009 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யும்) ஒழுங்கு விதியென அடையாளம் காட்டப்படும். இதன் மூலம் “தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற பெயரும் அதனைப் பெயராகக் கொண்டிருக்கும் அமைப்பும் தடைசெய்யப்படுகிறது. எனவே, இலங்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ எவராவது ஒருவர் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது அந்த அமைப்புக்காக செயற்படும் நிறுவனத்திலோ உறுப்பினர் அல்லது சிப்பாயாவது அல்லது தலைமைத்துவம் வழங்குவது, சீருடை, அடையாளம், இலட்சினை, கொடி போன்றவற்றை அணிதல், காட்சிப்படுத்தல், உயர்த்துதல் அல்லது தன்வசம் வைத்திருத்தல்; கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்வது, கூட்டம் கூட்டுவது அல்லது அதில் கலந்துகொள்வது; அங்கத்துவம் பெறுவது அல்லது இணைவது; உறுப்பினருக்கோ, சிப்பாய்க்கோ அல்லது வேறு நெருங்கியவருக்கோ புகலிடம் வழங்குதல், அவரை பாதுகாத்து வைத்திருத்தல், அவருக்கு உதவியளித்தல்; ஊக்குவித்தல், மேம்படுத்தல், உதவியளித்தல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அதற்காக செயற்படுதல் போன்ற ஏதாவதொரு செயற்பாட்டையோ அல்லது நிகழ்வை ஏற்பாடு செய்தல் அல்லது அதில் கலந்து கொள்ளல்; பணம் அல்லது பொருள் அன்பளிப்பு செய்தல் அல்லது அதற்கு பங்களிப்பு செய்தல்; பொருட்களை விநியோகித்தல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்தில் ஈடுபடுத்தல் அல்லது பகிர்ந்தளித்தல்; ஆதாரத்துக்கோ அல்லது பிரதிநிதித்துவத்துக்கோ உதவியளித்தல் போன்ற ஏதாவதொரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதல்; அதற்காக தகவல்களை பிரசாரப்படுத்தக்கூடாது.
இந்த விதிகளை மீறி செயற்படுவோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கொழும்பில் செயற்படும் மேல் மாகாண மேல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் 20 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படும்’ என்று கூறினார். இதேநேரம், இந்த விதிகளுக்கு அமைய தவறிழைத்தல், தவறிழைக்க முயற்சித்தல், அதற்கான உதவி உபகாரங்களை வழங்குதல் அல்லது அதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுவோர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு 10 வருடங்களுக்கும் மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எவராவது ஒருவர் இந்த விதிகளின் கீழ் ஏதேனும் தவறிழைக்கும் பட்சத்தில் அதன்போது தவறை இழைக்க நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவருக்கு அப்பால் சம்பந்தப்பட்ட நடவடிக்கையுடன் தொடர்புடைய அனைவரும் குறித்த தவறுக்கான குற்றவாளிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஏதாவது நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ எவரது பொறுப்பிலும் இருக்கும் பட்சத்தில் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் அமைச்சரின் எழுத்துமூல நியமத்தினூடாக அவரது பொறுப்பிலுள்ள மற்றும் நியமத்தின் பின்னர் பொறுப்பின் கீழ் வரவிருக்கும் நிதியோ, வைப்போ அல்லது கிடைக்க வேண்டிய கடனோ மற்றும் அந்த அமைப்பிற்குரிய வேறு ஏதேனும் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் அரச உடமையாக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இதேநேரம், சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கையில்; புலிகள் சமாதான பேச்சுகளுக்கு வருவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி புலிகளுக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் அதைப் புறக்கணித்து செயற்பட்டமையாலேயே இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டி நேர்ந்தது. புலிகளுக்கு வாய்ப்புகள் பல வழங்கியும் அவர்கள் அதற்கு செவிமடுக்காததாலேயே வேறு மாற்று வழியின்றி அரசாங்கம் இந்த கடுமையான நடவடிக்கைக்குள் சென்றது.
மனிதாபிமான உதவிகளுக்கு பாதிப்பில்லை
இதேநேரம், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தினால் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. அவசர வைத்திய சிகிச்சை வசதிகள், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது.
பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை
எவ்வாறிருப்பினும் பேச்சுகளுக்கான கதவை அரசாங்கம் ஒருபோதும் மூடவில்லை. பேச்சுகளுக்கு புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வர வேண்டும். ஜனாதிபதியும் ஏற்கனவே பேச்சுகள் பற்றிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, இப்போதும் எந்த தாமதமும் இல்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுகளுக்கு வரலாம்’ என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் 1998 ஆம் ஆண்டு கண்டி தலதா மாளிகை மீது மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதுடன், 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட் - காத்தான்குடி
இன்று இலங்கையிலிருந்து வெளிவரும் அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் புலிகள் தடை தொடர்பான செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செய்திக்கு தேசம்நெற் உம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. புலிகளின் தடையெனும்போது இந்த காலகட்டத்தில் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையுள்ளது.
அதாவது, கிளிநொச்சியை கைப்பற்றி மறுபுறமாக புலிகள் பலவீனப்படுத்தப்பட்டு வரும் இந்நிலையில் ”புலிகள் தடை எனும் செய்தியானது மறைமுகமாக சமாதானப் பேச்சுக்கும் தடை” என்ற பொருளையே உணர்த்துவதாக எடுத்துக் கொள்ள முடியும். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாயின் இத்தடை பாதிப்பாக அமையாது எனக் கூறப்பட்டாலும்கூட, புலிகள் ஆயுதங்களை வைத்து சரணடைந்து பேச்சுவார்த்தைக்கு வரும் என்பதை யதார்த்தமாக எதிர்பார்க்க முடியாது.
அவ்வாறாயின் இலங்கை அரசினால் இதன் பின்பு மேற்கொள்ளப்படக்கூடிய பேச்சுவார்த்தைகள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நடவடிக்கைகளின்போது புலிகளை சம்பந்தப்படுத்தக்கூடிய வாய்ப்பு குறைவடைகின்றது. எனவே, இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது நேற்றைய தடையுடன் கேள்விக்குறியாகி விட்டதாகவே தோன்றுகின்றது.