கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய அடுத்த நாள், இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று பாக்கு நீரினைப் பகுதியில் இரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த இரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரோ உளவுப் பிரிவின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre- ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த இரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரோ உளவுப் பிரிவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது
ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை. அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.
ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.
சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.