இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேசையில் விவாதிக்கக் கூடிய தேர்வுகளில் ஒன்றாக சமஷ்டி முறை கட்டமைப்பை உருவாக்குதல் அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர். எஸ். ராமதாஸ் கூறியுள்ளார். “இந்து’ பத்திரிகைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் ராமதாஸ், சமஷ்டி முறைமை யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான மறைந்த அன்ரன் பாலசிங்கம் இருந்த போது இந்த யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த யோசனை பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். இந்தப் பாதையில் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன நெருக்கடிக்கு தீர்வு காணும் முழு நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் உள்ளடக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் இணக்கப்பாடு காண்பதென்பது முட்டாள்தனமானதாகும். தேர்வானது தமிழ் தாயக சுயாட்சியை கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கை அரசும் புலிகளும் பேச்சுவார்த்தையூடாக இதனை எட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளை ராமதாஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்சி நீடித்திருக்கவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையானது பல்லின, பல்மத, பல்கலாசார நாடென்பதை இலங்கைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் போது இதனை மனதில் கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் புலிகள் நம்பிக்கையானவர்களாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்ட போது, நோர்வே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் மூலம் இலங்கைத் தமிழரின் பிரதிநிதிகள் புலிகள் என்பதைக் காண முடிகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இனநெருக்கடி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மனப்பாங்கு குறித்து ராமதாஸ் கவலை தெரிவித்தார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது இப்பிரச்சினை தொடர்பாக அவர் கொண்டிருந்த உணர்வு தற்போதைய ஆட்சியாளரிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரின் நியாயபூர்வமான உரிமைகள் என்ற ரீதியிலேயே இப்பிரச்சினை தொடர்பாக அக்கறை காட்ட வேண்டும். பயங்கரவாதமென்ற கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்று இந்திய அரசு காலத்துக்குக் காலம் கூறி வருகின்ற போதும் அதன் கொள்கை மாறவில்லை எனவும் வார்த்தைகள் செயலில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பிரச்சினையின் பாரதூரமான நிலைமை குறித்து போதியளவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் ஆனால், முழுக் கொள்கையையும் சில அதிகாரிகளே தீர்மானிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழீழம் உருவாக்கப்படுவது இந்தியாவுக்கு கேந்திர உபாய ரீதியான அனுகூலமாக அமையுமென குறிப்பிட்ட அவர், இலங்கை இந்தியாவின் நண்பனாக இல்லையெனவும் பாகிஸ்தான் அல்லது சீனா அல்லது அமெரிக்கா இலங்கைக்கு முன்னுரிமைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.