சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். எமது நாடு பயங்கரவாதத்திடமிருந்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயல் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.
இக்காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன். கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அலுவலக ஊழியர்களுக்கும் பத்திரிகைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறான கோழைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடக சுதந்திரத்தையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உறுதியாகப் பாதுகாப்பதற்கு எனது அரசாங்கம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.