கடந்த ஐந்து நாட்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதன்கிழமை அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிக்குமிடையில் வழித்துணை சேவையில் ஈடுபட்டது. படையினரும் விடுதலைப் புலிகளும் உறுதி மொழி வழங்கியதையடுத்தே வழித்துணை சேவையில் ஈடுபட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரெரசி விஜேயவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன், புதன்கிழமை ஒன்பது அம்புலன்ஸுக்கு வழித்துணை வழங்கியதையடுத்து 47 நோயாளர்கள் சேவையைப் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இச்சேவை வியாழக்கிழமையும் வழங்கப்படும் பட்சத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான 40 உணவு லொறிகள் செல்லுமென அம்மாவட்ட செயலகங்களின் வவுனியா இணைப்பு கிளை அலுவலகங்கள் தெரிவித்தன. இது இல்லாதிருக்க உலக உணவுத் திட்டத்தின் லொறிகளும் வவுனியாவிலிருந்து வன்னிக்கு செல்லுமெனவும் தெரியவருகின்றது.
கடந்த சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியான போதும் வன்னிக்கான வழித்துணை சேவை வழங்கப்படாததையடுத்து பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகள் தபால் மூலம் எடுத்துச் செல்லப்படவில்லை. இவையும் இன்று எடுத்துச் செல்லப்படலாமெனவும் தெரியவருகின்றது. பரீட்சை முடிவுகளை கடந்த சனிக்கிழமை கொழும்பு மற்றும் ஜெயவர்தனபுர கல்வி வலயப் பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய நிலையில் ஏனைய கல்வி வலயங்களுக்கான பரீட்சை முடிவுகளை தபாலில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது