அராஜக ஆட்சி, அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சிபெற வேண்டுமெனவும் பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து சக்திகளும் ஒரணியில் அணிதிரவேண்டுமெனவும் எதிரணித்தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்தனர். ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் ஒன்றிணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட எதிரணிகளின் கூட்டமைப்பு நேற்று முன்தினம் தலைநகர் கொழும்பில் நடத்திய ”பொறுத்தது போதும்” எனும் கருப்பொருளிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசுகையில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ஆகியோர் நாட்டு மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்தனர்
எதிர்ப்புக்கூட்டம் 4 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிநேரம் மட்டுமே இடம் பெற்றது. அதன் பின்னரே ஹைட்பாக்கிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பெற்றது ஊர்வலம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ்,ரி.பி.ஜாயா மாவத்தை, பீன்ஸ் வீதி ஆகிய பாதைகளில் சுமார் ஒரு மணிநேரம் வரை போக்குவரத்துகள் தடைப்பட்டன. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் லிப்ரன் சுற்றுவட்டத்தில் நிலத்தில் அமர்ந்து எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய பின்னர் கூட்டம் கலைந்தது.
எதிர்ப்புக் கூட்டத்தில் பிரதான உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமதுரையில் தெரிவித்ததாவது; நாட்டில் இன்று ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறை மீது தாக்குதல்களை மேற்கொள்ளுமளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. நாட்டில் அநீதி அரசோச்சுகின்றது . அரசாங்கமே நீதிமன்றத்தை அவமதிக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குக்கூட போக முடியாத விதத்தில் ஆளும் தரப்பினர் குழப்பம் விளைவிக்கின்றனர். ஊடக சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.
எம்.ரி.வி., சிரச தொலைக்காட்சி நிலையம், அரசின் ஒத்துழைப்புடனேயே தீவைக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்மிடம் போதிய அத்தாட்சி கிடைத்துள்ளது. அண்மைக்காலமாக அமைச்சர்களான டலஸ் அழகப்பெருமவும் சம்பிக்கரணவக்கவும் தொடர்ச்சியாக புலிகளின் ரி.வி. என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.ரி.வி.நிலையத்துக்குள்ளிருந்து 81/2 கிலோ எடை கொண்ட கிளைமோர் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவற்றை பகிரங்கப்படுத்துவோம் . ராஜபக்ஷ அரசு யுத்தத்தை காட்டி நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது.யுத்தத்தை வைத்துக்கொண்டு நாட்டை அராஜகத்தின் பக்கம் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. நாம் பொறுமைகாத்தது போதும் நாட்டை தொடர்ந்து அழிவு நிலைக்குக் கொண்டு செல்ல இடமளிக்கக் கூடாது. இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து தேசத்தையும், மக்களையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராடமுன்வரவேண்டும். இந்தப் போராட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டமாக நாடு தழுவிய மட்டத்தில் முன்கொண்டு செல்லப்படும். அரச பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் ஒழித்துக்கட்டி ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கும் வரை நாம் இனிமேல் ஓயப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்தார