முச் சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு எரிபொருள் மானியமாக அரசு வழங்க முன்வந்துள்ள 600 மில்லியன் ரூபாவையும் இராணுவத்தினருக்காக பயன்படுத்துமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவீட்டு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முச்சக்கரவண்டி உரிமையாளர்களை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து மானியம் தொடர்பாக அறிவித்த போதே முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இந்தச் செயலை ஐ.தே.க.வினர் முன் மாதிரியாக பின்பற்றவேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தமக்கான எரிபொருள் மானியத்தையே வழங்க முன்வந்துள்ள போது ஐ.தே.க.வினர் கிளிநொச்சியை மீட்ட வெற்றியைக் கொண்டாட எரிபொருள் விலையை குறைக்குமாறு கோருகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் மானியத்தை திரும்பப்பெற ஜனாதிபதி விரும்பவில்லை. இராணுவத்தினருக்காக இந்த தியாகத்தை செய்ய விரும்பினால் விரும்பியவர்கள் அதனை வழங்கலாமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.வினர் யுத்தம், பொருளாதாரம் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்தே அரசுக்கெதிராக பிரசாரம் செய்தனர். இப்போது யுத்தத்தைப் பற்றி அவர்களால் பேசமுடியாது என்பதால் பொருளாதாரத்தைப் பற்றி கூச்சலிடுகின்றனர். முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் செயலை முன் மாதிரியாகக் கொண்டாவது ஐ.தே.க. திருந்த வேண்டும்.