வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்ற அனைவருக்குமே கிடைத்த ஓர் மாபெரும் வெற்றியாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் மட்டக்களப்பு அலுவலகம் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி. சந்திரகாந்தனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இந்த வெற்றியினூடாக வட பகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்கித் தவிக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர், யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. கிழக்கைப் போன்றே வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதனூடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஓர் ஜனநாயகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமான அரசியல் இருப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
அண்மைக் காலமாக இராணுவ முன்னேற்றங்களை வைத்துப் பார்க்கின்றபோது இப்பாரிய வெற்றியானது சமாதான விரும்பிகள் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். உண்மையிலேயே இலங்கையின் இறைமைக்குட்பட்ட எந்த ஓர் நிலப்பிரதேசத்திலும் இருக்கின்ற பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படுகின்ற அதேவேளை, மீண்டும் ஒருமுறை பயங்கரவாதமானது துளிர்விடுவதற்கு யாருமே அனுமதியளிக்கக்கூடாது, பயங்கரவாதத்தின் கொடூரங்களுக்கு பலியாவது அப்பாவி பொதுமக்களும், அரச உடைமைகளுமே. ஜனாதிபதியின் வழிகாட்டலில் படையினர் ஈட்டியிருக்கின்ற இந்தப் பாரிய வெற்றியினூடாக ஏற்படவிருக்கின்ற அனுகூலங்களை முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க வேண்டும். இப்பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்ட மக்களை மீட்டெடுத்து ஜனநாயக முறையில் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றபோது அந்த மக்கள் நிம்மதியுடன் வாழ்கின்ற நிலை தோற்றுவிக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.