புலிகள் இயக்கத்தினர் மீதான தடை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது என்று தகவல் ஊடகத் துறை அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவார்களாயின் அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது. இதனை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாத வகையில் புலிகள் இயக்கத்தினர் மீதான தடை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகள் இயக்கத்தினர் அப்பாவி மக்களைத் தடுத்து வைத்துள்ளனர். அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்கின்றார்கள் இல்லை. அப்பாவி மக்களை அவர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். அம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுக்கின்றனர். புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள அப்பாவி மக்களை விடுவிப்பதை பிரதான நோக்காகக் கொண்டுதான் இத்தடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழேயே புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இத்தடையை அரசாங்கம் சுய முடிவாகவே மேற்கொண்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தை இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ளன. இலங்கையில் இப்போது தான் இந்த அமைப்பு தடை செய்யப்படுகின்றது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் தான் இற்றைவரையும் அவ்வியக்கத்தைத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை.
என்றாலும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதனால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படாத வகையிலேயே புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உரையாற்றுகையில், புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யும் 32வது நாடாகவே இலங்கை அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே இத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தினர் அங்கு தடுத்து வைப்பவர்களில் 14, 15 வயது சிறுவர்களை பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன என்றார்.