பாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பாய் தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலான துர்ரானியை பிரதமர் யூசுப் ராசா ஹிலானி பதவி நீக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான கருத்துகளைத் தெரிவிக்கும் பொழுது உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் கருத்து வெளியிட்டமைக்காகவே மெஹ்மூட் அலியைப் பணி நீக்கம் செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மும்பைத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென இந்தியா தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருவதுடன் அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் இந்தியா கையளித்துள்ளது.
ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள பாகிஸ்தான், அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லவெனவும் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவித்த சில மணித்தியாலங்களின் பின்னர் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவரென்று பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் செர்றி ரகுமானும் அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூட் அலி துர்ரானி தெரிவிக்கையில்;
மும்பைத் தாக்குலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அஜ்மல் பற்றி பாகிஸ்தானின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தான் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் ஒகரா மாவட்டத்திலுள்ள பரித்கோட் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அமீர் கசா இலாகி.
விசாரணை அதிகாரிகளிடம் அஜ்மலின் பெற்றோர் கூறும் போது, தங்கள் மகன் அஜ்மல் 4 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்று விட்டதாகவும் அதற்குப் பிறகு இடைப்பட்ட காலங்களில் சில தடவைகள் அவர் தங்களுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மும்பைத் தாக்குதலின் போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் அவரைத் தங்கள் மகன்தான் என்று அடையாளம் கண்டுகொண்டதாகவும் அஜ்மலின் பெற்றோர் கூறியிருக்கிறார்கள்.
இந்த விசாரணை அறிக்கையின் நகல்கள் உள்துறை அமைச்சகத்திடமும் பிரதமர் கிலானியிடமும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது பற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆரம்ப கட்ட விசாரணையில் மும்பையில் தீவிரவாதிகள் தங்களாகவே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புக்கும் அவர்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளதென தெரிவித்தார்.
இதேவேளை, அஜ்மல்கஸாப் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பதை பாதுகாப்பு அமைப்புகள் தனக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக துர்ரானி தெரிவித்துள்ளார்.