போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து அரச நிறுவனங்களின் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளோர் சம்பந்தமாக அரசாங்கம் கவனமெடுத்துள்ளதுடன் அரச சேவை ஆணைக் குழு இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதற்கு முன்னோடியாகவே கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சில் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (08) ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி ரஞ்சித் அலுவிஹார எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் (09) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் வாய் மூல வினாக்கான விளக்கங்களுக்கான வேளையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை முன்னுதாரணமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, அமைச்சில் பணிபுரிவோரின் தகைமைகளுக்கேற்ப அவர்களுக்கான பதவியுயர்வுகளும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.