புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளோ வெளிநாடுகளோ எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நேற்று முன்தினம் இரவு முதல் தடை விதித்திருந்தது. அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இராஜதந்திரிகள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தமை குறித்து ஒரு சிறு எதிர்ப்பை கூட வெளிப்படுத்தவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக எடுத்துள்ள இம்முடிவு அனைத்து நாடுகளும் விரும்பத்தக்க வகையில் அமைத்துள்ளதென்பதையே இது குறிக்கின்றது என தெரிவித்த அமைச்சர் இது அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியெனவும் குறிப்பிட்டார்.
இராஜதந்திரிகளுடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தலதா மாளிகை மீது புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி அரசாங்கத்தினால் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து அவ்வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தடை நீக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி முழுமையாக படையினரிடம் வீழ்ந்ததையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு பேச்சுக்கு வருமாறு புலிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி இதேபோன்றதொரு அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் புலிகள் தரப்பிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இச்சந்தர்ப்பத்திலேயே கொம்பனித்தெருவிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்கள் இன்னும் பயங்கரவாதத்தை கைவிடவில்லை யென்பதை நன்கு புலப்படுத்துகிறது. எனவேதான் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக புலிகள் இயக்கத்தை பிரகடனப்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளுக்கு அதனை அறிமுகப்படுத்துவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும். இதன் மூலம் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் ஆயுத உதவிகளை எம்மால் நாளடைவில் முழுமையாக நிறுத்திவிட முடியும். புலிகள் இயக்கத்தை நாட்டினுள் தடைசெய்துள்ளமை எமக்கு நல்லதொரு ஆரம்பமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்தை தடைசெய்ய எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்து வருகிர்களென செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்து பகிரங்கமாக எதுவும் தெரிவிக்க முடியாது. குறிப்பாக புலிகளுக்கு ஆயுதம் வழங்கும், அவர்களுக்காக நிதி சேகரிக்கும் நாடுகளிலேயே புலிகளை தடை செய்யவேண்டும்.
27 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 31 நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வு கழகம் உள்ளிட்ட புலிகளை சார்பு படுத்தி வெளிநாடுகளில் இயங்கும் முன்னணி அமைப்புக்களை தடைசெய்யவேண்டும். வன்னி மக்களுக்கென இவர்கள் சேகரித்த நிதியில் அங்கு என்னென்ன அபிவிருத்திகளை முன்னெடுத்திருக்கிறார்களென கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் உலக நாடுகளுக்கும் நன்கு விளங்கியிருக்கும். அவர்கள் அதுவரை அணிந்திருந்த முகமூடிகளை நாம் கழற்றிவிட்டோமெனவும் அமைச்சர் கூறினார்.