உலக உணவுத் திட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் 94 லொறிகளில் நேற்று வியாழன் காலை வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டன. உலக உணவுத்தாபனம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் 600 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. வவுனியா தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து இராணுவத்தின் பாதுகாப்புடன் லொறிகள் புறப்பட்டன.
ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதுக்குடியிருப்பு வரை லொறிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதென தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும், மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இவை ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி நகரம் பாதுகாப்புப் படையினரிடம் வீழ்ந்த பின்னர் வன்னிக்கு புறப்பட்ட முதலாவது உணவு லொறி தொடரணி இதுவாகும். புளியங்குளம் வீதி வழியாக ஒட்டிசுட்டான் சென்று தர்மபுரம் புதுக்குடியிருப்பு பகுதிக்கு உணவு லொறிகள் சென்றன.