அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த பின்னரும் ஐ. தே. க அதிலிருந்து தப்பிச் செல்ல எத்தனிக்கிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த பின்னர் அதனை நாம் சாதாரணமாக கருதவில்லை. அதனை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான விடயமாக கருதியதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்தே ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துள்ளோம். ஒழுங்கு பத்திரத்துள் சேர்க்கப்பட்டதன் பின்னர் இது ஐ.தே.க வுடையது என்று கூறமுடியாது. முழு சபைக்குமே சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த விடயத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே சபாநாயகரும் அதற்கான தீர்ப்பையும் வழங்கினார். இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.தே.க தோல்வியை சந்திக்கும் என்பதுமட்டும் உண்மை. தொடர்ந்தும் ஐ.தே.க தோல்விகளையே சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக எப்போது விவாதம் நடத்தினாலும் தாம் ஆயத்தமாக இருப்பதாக ஜே. வி. பியினர் தெரிவித்தனர். ஐ.தே.கவினருக்கும் அரச தரப்பினருக்கும் இடையே இவ்விடயம் தொடர்பாக நீண்டநேரம் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.