லசந்த படுகொலை; அரசு மீது எதிரணி குற்றச்சாட்டு

lasantha-02.jpgஊடக வியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் சூத்திரதாரி அரசாங்கமேயெனக் குற்றம் சாட்டியிருக்கும் பிரதான எதிர்க்கட்சிகள், அனைத்து ஊடகங்களும் ஒன்றுபட்டு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்காவது பகிஷ்கரிப்பை மேற்கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்ட முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. 

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையையடுத்து எதிரணிக் கூட்டமைப்பின் அவசர செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போது கட்சிகளின் தலைவர்கள் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்ததாவது; ”நாட்டில் ஜனநாயகம் தோல்வி கண்டிருப்பதன் அடையாளமாகவே லசந்தவின் படுகொலை காணப்படுகின்றது. விடுதலைப்புலிகள் அன்று நடத்திய படுகொலைகளைப் போன்றே இன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தென்னிலங்கையில் நடத்திக் கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு பிறந்த கையோடு எம்.ரி.வி. நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்டது. மூன்றாவது நாளில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவற்றின் பின்னணியில் அரசாங்கம் காணப்படுவதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம். சில அமைச்சர்களுக்கு இந்தச் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு உண்டு என்பதை தெரிவிக்க நாம் பயப்படவில்லை.

அரசாங்கத்தின் பொலிஸ் விசாரணைகளில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. சர்வதேச விசாரணையை கோர விருக்கின்றோம். அத்துடன் சர்வதேச ஊடக அமைப்புகள் அனைத்தையும் வரவழைத்து உண்மை நிலைகளை கண்டறியுமாறு கேட்கவிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; ”லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையோடு ஊடக அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஊடக அடக்குமுறை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று பட வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது.

லசந்தவை படுகொலை செய்தது ராஜபக்ஷ அரசாங்கம் தான் என்பது உலகறிந்த விடயமாகும். இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலையாகும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் அழைத்துள்ளோம்.  சிவராம் தொடங்கி இதுவரையில் 17 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்ட அதேபாணியில் தான் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் கொலை விவகாரத்தின் அண்மைய வரலாற்றில் ஈராக்குக்கு அடுத்த படியாக இலங்கை காணப்படுகின்றது. மிக விரைவில் ஈராக்கைப் பின்தள்ளி இலங்கை முன்னணிக்கு வரும் நிலையே காணப்படுகிறது?? எனவும் ஹக்கீம் கூறினார்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *