மத்திய மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் தமது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான சரத் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். தேர்தல் ஒழுங்கு விதிகளுக்கு முரணான பிரசார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாக தனது பதாதைகள், சுவரொட்டிகளை அகற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தேர்தல் சட்டம் மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், தனது புகைப்படங்கள், சுவரொட்டிகளை அகற்ற தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, சரத் ஏக்கநாயக்கவின் இந்த முன்னுதாரணமான செயற்பாட்டை தாம் பெரிதும் வரவேற்பதாக கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களதும் சுவரொட்டிகள் பதாதைகளை அகற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.
தேர்தல் நடைமுறை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை அனைத்து வேட்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். வன்னியில் நடைபெற்றுவரும் போரை தேர்தல் பிரசாரத்துக்காக அரசு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் மிகவும் சூடுபிடித்துள்ளன. ஆளும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மத்திய மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான வாய்ப்புகளும் அங்கு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.