புலிகளின் வான் பலத்தை அழிக்க கவனம் செலுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

parliment_inside.jpg
விடுதலைப் புலிகள் சிறு பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் புலிகளின் வான் பலம் இன்னும் அழிக்க முடியாமல் போயிருப்பது குறித்து எதிர்வரும் நடவடிக்கைகளின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அத்தநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;  பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவதே எம் அனைவரினதும் பொறுப்பு. நாட்டில் பயங்கரவாதம் தொடர்வதை எவரும் விரும்பவில்லை. எனவே, பயங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எமது ஆதரவு உண்டு. படையினர் புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றி தங்களது வெற்றியை நிரூபித்துள்ளனர். இந்நிலையில், படையினரால் மீட்கப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் படையினரின் வெற்றி அர்த்தமற்றதாகி விடும். ஏனெனில், கடந்தகால சம்பவங்கள் இதற்குச் சான்றுபகிர்கின்றன.

இதேநேரம், வடக்கில் பல பிரதேசங்கள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டிருந்தாலும் இங்கு தெற்கில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இம்மாதிரியான செயற்பாடுகளில் புலிகள் தொடர்ந்தும் ஈடுபடக் கூடும். எனவே, இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இராணுவத் தளபதி கூறியது போல புலிகள் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை. நாம் புலிகளின் பலத்தை உயர்த்திக் கூறவரவில்லை. எனினும், புலிகளின் வான் பலத்தை இன்னும் எம்மால் அழிக்க முடியாமல் போயுள்ளது. எனவே, எதிர்வரும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *