இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

இது குறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதல்வர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார். பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் திமுக மீது சந்தேகத்தை கிளப்புகின்றன.

தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க திமுக தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கிறது. அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியா தான் வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுக்கவில்லை.

சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை. ராணுவத் தீர்வு சாத்தியமல்ல என்று இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் கருத்து சொல்லிய பிறகும் தீர்வு என்ன என்பதைச் சொல்லாமலேயே இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசின் அரசே நடத்தும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் தங்களது இரட்டை வேடத்தை கலைத்துவிட்டு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தி பேச்சு வார்த்தை துவங்கிட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

மாறாக இலங்கை அரசு போரைத் தொடருமானால் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரிக்க வேண்டும். சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் 12.1.09 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையில் நடைபெறும்.

இதற்கு தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் முன்னிலை வகிப்பார். கட்சியின் அனைத்து முன்னணி நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் 9ம் தேதி பிஜேபி நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தம், வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்ப நீண்ட வரிசை, எரிபொருள் இருப்பு இல்லை என்கின்ற வாசக அட்டைகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொங்குகின்றது. காரணம் எண்ணெய் வளத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.

நம்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் 9 நிறுவனங்களுக்கு நவரத்னா எனப் பெயர் சூட்டி அதற்கான விசேஷ விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது. அந்த நிறுவனங்கள்தான் அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்திற்கு நிர்வாகி கள் தொழிலாளர்கள் ஆகியோரும் காரணம் என்பதால் அந்த லாபத்தில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.ஆனால் அரசு சமீபத்தில் சம்பள சீர்திருத்தம் குறித்து கணக்கிடும் போது இந்த லாபம் ஈட்டும் நிறு வனங்களுடன் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும் சமமாக்கி பரிந்துரைத்தது.

பொதுவாகவே சம்பள சீர்திருத்தம் என்றாலே ஏதேனும் கொஞ்சமாவது சம்பள உயர்வு இருக்கும் என எதிர் பார்ப்பது இயற்கை. விசித்திரமான முறையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்துள்ளது. பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நிர்வாகமே கூட சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்து முன்பணமாக ஒரு தொகையை தந்தது. மாறாக சம்பளம் குறைந்த தால் ஏற்கனவே நிர்வாகமே தந்த பணத்தை ஊழியர்கள் திரும்பக் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் நிறுவனங்களின் அதிகாரி களுக்கு உரிய சம்பளம் வழங்கப் படுதல் அவசியம்; நியாயமும் கூட. மாறாக அவர்கள் வஞ்சிக்கப்படுவார் களானால் தனியார் துறை நிறுவனங் கள் அவர்களது திறமையை பயன் படுத்திக் கொள்ள அதிக சம்பளம் தர காத்துக் கிடக்கின்றன. இதைத்தான் அரசு சார்பான சில பெரியவர்கள் விரும்புகிறார்ளோ என நான் சந்தேகிக்கிறேன். தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் சிலரது திட்டமோ என சந்தேகிக்கின்றேன்.

எனவே அரசு உடனடியாக போராடும் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக வேலை நிறுத் தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற் கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *