காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்து நேற்று (9) கொழும்பு உட்பட நாடு பூராவும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜும்ஆ தொழுகையின் போது விசேட துஆப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்து கொண்டனர். காஸா மீதான குரூரமான தாக்குதலை நிறுத்துமாறும் சர்வதேச சமூகம் தலையிட்டு இதற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா, தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, பலஸ்தீன தூதுவர், ஜே. வி. பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் ஹெட்டி, மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம், மு. கா. உறுப்பினர் சபீக் ரஜாப்தீன், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் தலைவர் முஜீபுர் ரஹ்மான் உட்பட பெருந் திரளானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தென் கிழக்குப் பல்கலைக்கழக முஸ் லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக மாணவ கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.