23 வருடங்களுக்கு பின்னர் A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.
கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9 சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.
A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட, 23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.
1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9 பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.
A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9 பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.
A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)
இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.
புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர். இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்
A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது. அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது. இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.
இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)
A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.
பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம
A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஜனாதிபதியின் உரை
நேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:
2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.
எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.
அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர். அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள். இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது. புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.
பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.
நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது. தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது. தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது. கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம். இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.
எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.
இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.
மாற்றுகருத்துதோழர்
“23 வருடங்களுக்கு பின்னர் யு-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ்”
இருந்தும் என்ன எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் பாவனைக்கு எக்காரணம் கொணடும் திறந்துவிடப்படமாட்டது. அதுதான் சிறிலங்கா ஐனநாயகம்.
thambi
What ever the Sri lanka army and police won’t allow the LTTE and their supports via this road to Jaffna specially the LTTE fund raisers in Europ and USA – the Sri lankan intelligence have all these deatils in full -may be this is sad for another 5years
arthanaarieswaran
//இருந்தும் என்ன எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் பாவனைக்கு எக்காரணம் கொணடும் திறந்துவிடப்படமாட்டது. அதுதான் சிறிலங்கா ஐனநாயகம்//
மாற்றுக் கருத்துத் தோழர் கொஞ்சம் நிதானமான கருத்துக்களை முன் வைப்பது நல்லது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை பாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறப்பதையே தனது முதலாவது நோக்கமாகக் கொண்டது. அந்த வகையில் மிக விரைவில் ஏ-9 பாதை பொது மக்கள் பாவனைக்காக மிக விரைவில் திறக்கப்படும். அதை நீங்களும் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
ashroffali
ஏ-9 பாதை விடுவிக்கப்பட்ட போதே அது பொதுமக்கள் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து விட்டது. அதற்குப் பிறகும் விதண்டாவாதமான கருத்துக்களை முன்வைப்பது அழகல்ல