இஸ் ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிப்பதோடு , பலஸ்தீன மக்களின் விடுதலைக்கு ஆதரவாக சகல இன மக்களும் கட்சி பேதங்களை மறந்த ஒட்டு மொத்தமான ஆதரவை வழங்க வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மெரைன் கிறான்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் அவர் உரையாற்றுகையில்; பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இங்கு முன்னெடுக்கப்படும் ஆதரவு போராட்டத்துக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ள இக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்படவேண்டும். இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்தும் நல்கும்.
ஹிட்லருக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஐ.நா சபையில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகள் இன்று இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் கண்டிக்காமல் இருக்கின்றன. அந்தளவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை இன்று கையறுநிலையில் இருக்கிறது. அதேநேரம் அரபுலகில் உள்ள பல நாடுகள் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் நாம் காண்கிறோம். பலஸ்தீனின் காஸாப் பிரதேசம் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்குப் ஈரானிய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற பார்வையில் தான் பலஸ்தீனுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அவர்களது விடுதலைக்காக இலங்கையில் உள்ள தமிழ் , சிங்கள ,முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டும் உதவவேண்டும் என்ற முனைப்புடனேயே முக்கிய அரசியல் கட்சிகளும் இணைந்து பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவை வெளிப்படுத்துகிறோம்.பலஸ்தீன மக்களின் விடுதலை என்பது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விடிவுக்காகவும் , அவர்களுக்கான நீதி, நியாயங்களுக்காகவும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற செய்தியை உலகுக்கு இங்கு வெளிப்படுத்துகிறோம்.
இஸ்ரேலின் இத்தாக்குதல்களை வாய்மூடி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும் , ஏனைய நாடுகளும் இஸ்ரேலிய இராணுவ பலத்தையும், காஸாப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு இயங்குகின்ற ஹமாஸ் அரசாங்கத்தையும் ஒன்றாக சமநிலைப்படுத்திப்பார்க்க முடியாது. அண்மையில் இலங்கை அரசாங்கம் கூட இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் போது ஹமாஸ் இயக்கமும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அறிக்கையை விடுத்திருந்தது. இதனை நாம் எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது.
ஹமாஸின் தாக்குதல்களையும் நிறுத்தச் சொல்பவர்கள் கடந்த எட்டு வருட காலத்தில் இஸ்ரேலில் இறந்தவர்களின் தொகை 19 பேர் மட்டும் தான் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். ஆனால், கடந்த 10 நாட்களுக்குப்பின் இஸ்ரேலின் தாக்குதல்களினால் பலஸ்தீனத்தில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருக்கின்றார்கள். இவர்களில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் அதிகம் அடங்குகின்றனர். ஐ.நா. சபையின் கீழ் இயங்கும் ஒரு பாடசாலை மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும், பலஸ்தீனருக்கு ஆதரவாகவும் போராடும் எமது முயற்சி தொடர்ச்சியாக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.