பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என இந்த மூன்று தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒத்த கருத்துக்களைக் கொண்ட கட்சித் தலைவர்களை இணைக்கும் முயற்சியில், திருமாவளவன் இறங்கியுள்ளார். அதன் அடிப்படையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை எவ்வாறு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக தெரிகிறது. அத்துடன் ஈழ ஆதரவு கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, போராட்டம் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில் பாமக நீடிக்க வேண்டும், விலகக் கூடாது என வீரமணி கேட்டுக் கொண்டாராம்.