ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பான ஏதேனும் முறைப்பாடு செய்யப்பட்டால் அது குறித்து விசாரணை செய்யப்படும்மென அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் ஆனையிறவு வெற்றியை அடுத்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க அமைச்சர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரம்புக்வெல இவ்வாறு கூறினார்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போல் அந்த இயக்கத்தில் இருந்த கருணா மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் இது குறித்து கருணாமீதும் நடவடிக்கை எடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பவே, அப்படி எந்தக்குற்றச்சாட்டுகள் எதுவும் கிடையாதென முதலில் மறுத்துவிட்டனர். இதனையடுத்து சிறுவர்களைப் படைக்கு சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் கருணா மீது இருப்பதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டிய போது பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முறைப்பாடு செய்யப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்யப்படும். ஆனால் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை. பிரபாகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளுடன் முறைப்பாடுகள் இருந்தமையினாலேயே அவருக்குத்தண்டணை வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.