மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க “நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையினால் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறை மிகவும் பின்னடைவான நிலையிலுள்ளது. தற்போது கிழக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு மாகாண சபையும் செயற்படத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முன்வரவேண்டும் இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள மகாஓயா கரஸ்கல பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதிக் கட்டிடத்தை கடந்த திங்கட் கிழமை மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க திறந்துவைத்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் ” கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளங்கள் அதிகம் இருந்தபோதிலும் கல்வி வளம் சிறப்பாக இல்லாமையினால் பின் தங்கிய நிலையில் இருக்கிறது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு மாகாணசபையின் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரஸ்கல பகுதி போன்ற பின் தங்கிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தங்கியிருப்பதற்கான விடுதிகள் அமைக்கப்படவிருக்கிறது. விடுதி வசதிகள் இருந்தால்தான் கஷ்டமான பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு ஆசிரியர்களும் முன்வருவார்கள்.’
கிழக்கு மாகாணம் 8063 சதுர கிலோ மீற்றர் பரப்புள்ள மூன்று மாவட்டங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்கள்தான் அதிகமாக உள்ளது. இங்குதான் கல்வியை அபிவிருத்தி செய்யவேண்டும். கிழக்கில் 985 பாடசாலைகளும் 27 தேசிய பாடசாலைகளும் செயற்பட்டுவருகிறது. இவற்றில் 382,088 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 76,669. தமிழ்மொழி மூலம் கல்வி கற்பவர்கள் 305,415 மாணவர்கள். ஆனால், முக்கிய பாடங்களான ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்கள் கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாதுள்ளது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது.
அமைதியற்ற சூழ்நிலையினால் மூடப்பட்ட பாடசாலைகளில் 33 பாடசாலைகள் இன்னும் இயங்காது இருக்கிறது. வறுமையின் காரணமாக அதிகமான சிறார்கள் ஆரம்பக் கல்வியைக்கூட கற்றுக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். இவர்களை கண்டுபிடித்து கல்வியை கற்பிக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் 107 அநாதை சிறுவர் இல்லங்கள் செயல்படுகிறது. இவர்களின் கல்வியும், எதிர்காலம் பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். கிழக்கில் 30 வயதுக்கு குறைந்த 33 ஆயிரம் இளம் விதவைகள் உள்ளனர். இவர்களின் 68 ஆயிரம் சிறுவர்கள் வறுமை காரணமாக கல்வியை கற்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் கிழக்கில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டமொன்றையும் உருவாக்கவேண்டியிருக்கிறது என்றார்.’