ஏ-9 பாதையில் மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த உடனேயே பயணிகளின் போக்குவரத்துக்காகத திறக்கப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
மன்னார் – பூநகரி கேரதீவு வரையிலான ஏ-32 பாதை திருத்த வேலைகளில் ஈடுபடும் பொறியியல் குழுவினரின் உதவியுடனேயே ஏ-9 பாதையின் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படும்.
ஓமந்தை முதல் கிளிநொச்சி வரையில் பாதையில் திருத்த வேலைகள் செய்ய தேவையேற்படாது. எனினும், ஆங்காங்கே சிறு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். கிளிநொச்சி முதல் முகமாலை வரையிலான பாதையே பெரிதும் பழுதடைந்துள்ளன.
இதேவேளை, ஏ-32 பாதையின் திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இப்பாதையின் திருத்த வேலைகளை முற்று முழுதாக பூரணப்படுத்துவதற்கு புலிகளின் தாக்குதல் தடையாக இருந்தது. ஆனையிறவு கைப்பற்றியதுடன் இத்தடையும் நீங்கியது என்றும் குறிப்பிட்டார்.
கிழக்கின் அபிவிருத்தி முன்னெடுப்பு போன்றே மின்சாரம் வழங்கல், குடிநீர் வழங்கல், அரச நிர்வாக பொறிமுறைகளை ஆரம்பித்தல், பொலிஸ் நிலையங்களை நிறுவுதல் போன்றவை பூர்த்தியடைந்ததன் பின்னரே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் படும் என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.