வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவி செய்யும். ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷவுக்கும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா சாத்தியமான, இயலுமான ஒவ்வொரு துறையிலும் தனது உதவிகளை வழங்கும் என்று இந்தியத் தூதுவர், பஸிலிடம் வாக்குறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவித்தன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு “தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி’ மூலம் 300 மில்லியன் ரூபாவைத் திரட்டுவதற்கு கடந்த புதன்கிழமை – இம்மாதம் 7 ஆம் திகதி – நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
சட்டமூலத்தைச் சமர்ப்பித்துப் பேசிய பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இந்த வரி அழிவுற்ற வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் – கடந்த ஒக்ரோபர் மாதம் இறுதிவாரத்தில் இந்தியாவுக்கு ஜனாதிபதியின் விசேட தூதுவராகச் சென்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, நேற்று இந்தியத் தூதுவருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இயன்றளவு, சாத்தியமான சகல உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் என அறியப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருள்களின் விநியோகம் குறித்தும் பஸில் ராஜாபக்ஷ இந்தியத் தூதுவருக்கு விவரமாக விளக்கினார். அது குறித்து இந்திய அரசின் சார்பில் தூதுவர் அலோபிரசாத் திருப்தி தெரிவித்ததுடன்- இந்திய அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அன்பளிப்புகளை விநியோகித்தமைக்கும் இலங்கை அரசுக்கு நன்றியும் கூறினார்.