அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய நாடு எதுவென்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா.வில் முறையிட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டுமக்களை ஏமாற்றாமல் சதிகாரர்கள் யார் என்பது பற்றியும் எம்.ரி.வி. தீவைப்பு, லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாகவும் உண்மைகளை இன்று வெளியிடவேண்டுமெனவும் கேட்டிருக்கின்றார். சர்வதேசத்தின் மீது சுட்டுவிரல் நீட்டி அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கமுயலும் கபட நாடகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகிந்தாலை சாஞ்சி விகாரையில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் ஜானகபெரேராவின் மூன்று மாத நினைவு சமய நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, யாழ்ப்பாணத்தில் ஊடகநிறுனத்தின் மீதான குண்டுத்தாக்குதல், தொப்பிகல மீட்கப்பட்டதன் பின்னர் ஆங்கில ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை, வவுனியா அகதி முகாம் தீ வைக்கப்பட்டமை, பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை, எம்.ரி.வி. ஊடகநிறுவனம் தீவைக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பனவற்றின் பின்னணியில் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச சக்தியொன்றின் சதி காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்காற்றிய உரையின் போது குற்றச்சாட்டு சுமத்தியிருக்கின்றார்.
இக்குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஒரு நாட்டின் மீது பழிசுமத்தும் போது ஆழமாக ஆராய்ந்த பின்னரே அதனைச் செய்ய முடியும். நாட்டின் தலைவர் என்ற பொறுப்பைக்கொண்ட ஜனாதிபதி இக்குற்றச்சாட்டை சுமத்துவதான மிக உன்னிப்பாக நோக்கப்படவேண்டியதாகும். சர்வதேசத்தின் சதியென்று பொதுப்படையாகக் கூறிவிட்டு உலகத்தை ஏமாற்றி விடமுடியாது. முன்னே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச சதியென்றால் அவற்றுடன் தொடர்புபட்ட நாடு எது என்பதை ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடாமலிருப்பது ஏன் எனக் கேட்கவிரும்புகின்றோம். தனது அரசியல் நலனுக்கும், அதிகார இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சுமத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ அநுராதபுரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குழுவினரின் படுகொலைகள் தொடர்பில் அவ்வாறானதொரு குற்றச்சாட்டை சுமத்தவில்லை எனவே அதற்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது உறுதியாகியுள்ளது.
ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை இழக்க நேரிட்டதாக ஜனாதிபதி தமதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அக்காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசில் அவரும் ஒரு பங்காளி என்பதை மறந்துவிடக்கூடாது. இம்முறை வன்னி இராணுவ நடவடிக்கையின் போது 2,500 படைவீரர்கள் பலியானதாகவும் 15 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறிக்கையொன்று கூறுகிறது.
இவற்றை அரசு ஏன் நாட்டு மக்களுக்கு மறைக்கவேண்டுமெனக் கேட்கின்றோம். யுத்த வெற்றியின் பெருமை படையினருக்கும் நாட்டுமக்களுக்குமே உரியது. இதனை ஜனாதிபதி தமக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் நலன்களை பெற முயற்சிக்கின்றார் எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.