மலை யக மக்கள் அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்காது சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மத்தியமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரான எஸ்.சிவஞானத்துக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நேற்று சனிக்கிழமை மாத்தளை மாநகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சிறுபான்மை சமூகத்தினரான எமக்கு இந்நாட்டில் தனித்து ஆட்சி செய்யமுடியாது. ஆகையால், அவ்வப்போது பதவிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டே எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.
அமரர் தொண்டமான் இதனடிப்படையிலேயே செயற்பட்டு மலையகத்திற்கு பல்வேறான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையிலேயே நாமும் செயற்பட்டு வருகின்றோம். நாம் எமது அரசியல் பலத்தின் மூலம் மாத்திரமே அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்த அரசியல் பலத்தைக் கொண்டே தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவருகிறோம்.
இதேபோல ஏனைய மாவட்டங்களிலும் அரசியல் பலத்தைப் பெறவேண்டும். பலமான அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோமானால் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக் கொள்ளமுடியும். ஒரு சில தோட்டங்கள் அரசியல் வாதிகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் கையளிப்பதற்கு திட்டமிட்டு காடாக்கப்பட்டு வருகிறது. மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கவேண்டும். அல்லது அதற்கான வேதனம் வழங்கவேண்டும் என்று சட்டம் இருந்தும் அது அமுல்படுத்தப்படவில்லை.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபடவேண்டுமானால் மேலும் அரசியல் பலம் பெறவேண்டும். ஆகவே எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் மத்தியமாகாணத்தில் போட்டியிடும் இ.தொ.கா. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதற்கு மலையக மக்கள் முன்வரவேண்டும்.