ஏறாவூர், திஹிலிவட்டை பிரதேசத்தில் ரி. எம். வி. பி.க்கும் புலிகள் இயக்கத்துக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதல்களில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்திவெளி வாவிக்கு அப்பால் அமைந்துள்ள ரி. எம். வி. பி. அலுவலகத்தின் மீது புலிகள் இயக்க உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இந்த மோதல்களில் ரி. எம். வி. பி. உறுப்பினர் ஒருவரும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருசிவிலியன்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலங்களுடன் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ரீ. எம். வி. பி. தரப்பில் சந்திவெளியைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சீலன் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.