முல்லைத்தீவு, ஐயம் பெருமாள் பிரதேசத்தில் அமைந்துள்ள சகல வசதிகளையும் கொண்ட புலிகளின் முகாம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர். முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் இந்த முகாமை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.
புலிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் தளமாகவும், பயிற்சி முகாமாகவும் இருந்துள்ள இந்த முகாம் விசாலமிக்க தோட்டம் ஒன்றுக்கு மத்தியில் அமையப் பெற்றுள்ளதாகவும் அதனை சுற்றிவர 12 அடி நீளமான முற்கம்பிகளால் வேயப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதான விரிவுரை மண்டபம், 12 தற்காலிக கொட்டகைகள், மருத்துவ அறை ஒன்று, களஞ்சியசாலை கட்டடம் மற்றும் சமையலறை ஒன்றும் இந்த முகாமில் அமையப் பெற்றுள்ளன. இதுதவிர 60 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் உட்பட ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.