ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதிச்சடங்கில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அடக்குமுறையும் அரச பயங்கரவாதமும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் மக்கள் மௌனமாக இருக்க முற்பட்டால் அதன் பலாபலன் நாட்டை பேரழிவுக்கே இட்டுச் செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; நீதிக்காகவும், நியாயத்துக்காகவும் தனது பேனையை பயன்படுத்திய தைரியமுள்ள ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உயிரை பறித்து ஊடகத்துறையை மௌனிக்கச் செய்யும் அடக்குமுறையின் இன்னொரு படிக்கு அரச பயங்கரவாதம் முன்னேறியுள்ளது.
அரசு அதன் அடக்குமுறையின் மூலம் ஊடகத்துறையை அடிபணிய வைக்க எத்தகைய கபடத்தனத்தையும் செய்யத்தயங்கப்போவதில்லை என்பதை இப்படுகொலையின் மூலம் பறைசாற்றியுள்ளது. நாம் தொடர்ந்தும் மௌனமாக இருப்போமானால் நாளை இன்னொரு ஊடகம் தீவைக்கப்படலாம், மற்றொரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படலாம். அதற்கு இடமளிப்பதா அல்லது உடனடியாக அணிதிரண்டு இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஊர்வலத்திலும், மாலையில் பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறும் இறுதிக்கிரியையிலும் மக்கள் அணிதிரள வேண்டும். அதனூடாக மக்கள் சக்தி என்ன என்பதை அரசுக்கு உணர்த்திக் காண்பிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அழைப்பை விடுத்தார்.