முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலை படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் ஜப்பானின் விஷேடதூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.
வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் மூலம் கோரியும் அதனை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னரே இந்திய மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.