யாழ்ப் பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நெடுந்தீவின் கடற் கரையில் ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சடலத்தில் பச்சை நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிற அரைக்காற்சட்டையும் காணப்படுவதாகவும் முகம் அடையாளம் காணமுடியாதவாறு சிதைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. நிர்வாண கோலத்தில் காணப்பட்ட இந்த நான்கு சடலங்களிலும் அடிகாயங்கள், வெட்டுக்காயங்கள் உள்ளதாகவும் முட்கம்பிகளால் சுற்றப்பட்டுள்ளதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இவை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் வடமராட்சி பருத்தித்துறை கடற்கரையில் இரு இளைஞர்களின் சடலங்களும் கரையொதுங்கின. இந்த வாரத்தில் எழு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது. இதுவரை எவரது சடலமும் அடையாளம் காணப்படவில்லை. அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதால் இச்சடலங்கள் அவர்களுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.