கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சதித் திட்டம் தீட்டியவர்களை பாகிஸ்தான் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்றால் இந்தியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். எவ்விதமான நடவடிக்கை என்பதை முகர்ஜி விபரித்துக்கூறவில்லை என்றாலும், பாகிஸ்தானிடம் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை இந்தியா கையளித்துவிட்டது என்றும், பாகிஸ்தான் அரசு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானின் அரசு நிறுவனங்களுடைய ஆதரவு இருந்திருக்கத்தான் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இப்படியான அறிக்கைகளால் போர் பீதிதான் மேலோங்குகிறது என பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.