இலங்கை நெருக்கடிக்கு உறுதியான அரசியல் தீர்வொன்று அவசியமென பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்திக்கான திட்டங்களிலிருந்து எண்ணற்ற மனித மற்றும் மூலப்பொருள் வளங்களை இராணுவ செலவுகள் திசை திருப்பும் போது சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த 8 ஆம் திகதி வத்திக்கானில் 178 நாடுகளின் தூதுவர்கள் மத்தியில் நிகழ்த்திய வருடாந்த உரையின் போது, சமாதானத்தை எட்டவும், வறுமையிலிருந்து, விடுபடவும், சுதந்திர மற்றும் மத உரிமைகளை உறுதிப்படுத்தவும் அரசாங்கங்கள் மக்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டுமென்றும் 16 ஆவது ஆசிர்வாதப்பர் தெரிவித்திருக்கிறார்.
தூதுவர்களுக்கு தனித் தனியாகவும் புதுவருட வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் பாப்பரசர், ஆயுதகளைவு மற்றும் அணுவாயுத பரவல் தடை ஆகிய விடயங்களில் சிலவும் நெருக்கடித் தடயங்கள் குறித்தும் கவலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன், சில ஆசிய நாடுகளில் நிலவி வரும் தற்போதைய வன்முறைகள் தொடர்பாகவும் கவலை தெரிவித்திருக்கும் பாப்பரசர், இங்கு அரசியல் நிலைமைகளும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் சமாதானத்திற்கு அரசியல் ரீதியான உறுதியான தீர்வொன்று அவசியமென்றும் பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் வலியுறுத்தியிருக்கிறார். பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நாம் ஆவலாக இருக்கும் சமாதானம் இன்னும் தூரத்திலேயே இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இதற்காக நாம் எமது முயற்சிகளை இரட்டிப்பாக்காமல், எம்மை அதைரியப்படுத்திக் கொள்ளவோ உண்மையான சமாதானத்திற்கான எமது பொறுப்புகளையும் உழைப்புகளையும் குறைத்துக் கொள்ளவோ கூடாதென்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதேநேரம், காஸா வன்முறைகள் குறித்தும் கவலை வெளியிட்டிருக்கும் பாப்பரசர், இராணுவத் தெரிவுகள் ஒருபோதும் தீர்வைத் தராதென்றும் வன்முறைகள் என்பது எங்கிருந்தும் எந்த வகையில் வந்தாலும் அவை கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியவையே என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.